Friday, January 10, 2020

இயந்திர இதயம்...

இழப்பிலும்
இன்பத்திலும்
உறவிலும்
உதறிடினும்
இயங்கும்
இயந்திர
இதயம்.


வேண்டும் தெய்வம்!

புனித நூல்கள்
திறந்து வைக்கப்பட்டிருந்தன.
தீபங்களும்
ஒளிர்ந்து கொண்டிருந்தன....
வண்ண ஓவியங்கள்
அழகு சொரூபங்கள்
ஒளி வெள்ளத்தில்
மினுங்கி
தெய்வீகத்தைத்
தந்து கொண்டிருந்தன!

நறுமண வாசனைக்
கமழ்ந்து
இசை முழங்கும்
அதிர்வில்
வெண்பளிங்கு திருபீடத்தில்
பிரசன்னமாகிவிட்டது
தெய்வம்!

அருளில் நனைந்து
பரவசமாய் எழுந்த
பக்தனிடம்,
“இன்று மலர்ந்த
உன் இதயத்தின்
பரிசுத்த பூக்கள்
வேண்டும்.”
என்றது தெய்வம்!

இவன் செவிகளில்
விழவே இல்லை!

(c) manoharggs@gmail.com

Thursday, November 21, 2013

மரண வாசனை

மரண வாசனை
 
வசந்தத்தின் தடயங்களை
ருசித்தபடி
பாதங்கள் பழகிய
ரோசா தோட்டங்களைச்
சுற்றிவருகிறேன்.
 
மாமரத்து நிழலில்
கரும்பு சுவைத்து
காலம் புறககணித்து
உரையாடிய பொழுதுகள் மட்டுமே
சரித்திரத்துக்குத் தகுதியானவை.
 
தோட்டத்துக் கிணற்றில்
காட்டெலிகளும்,
ரோசாக்கள் குடியிருப்பில்
புதரும் பற்றிக்கிடக்க
படபடக்கும் மேற்காற்றுக் கடக்கையில்
மரணவாசனை சுமந்த சருகு ஒன்று
பறந்து வந்து தோளில் அமர்ந்துகொண்டது.

(c) darisingsun@blogspot.com